நான் வாசித்த ஆதவனின் முதலாவது சிறுகதை நிழல்கள்.எழுத்தாளர் அசோகமித்ரனால் தொகுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு ஒன்றில் மேற்கூறிய கதை இடம்பெற்றிருந்தது.அந்தக் கதை என்னை மிகவும் கவர்ந்தது என்று கூறமுடியாவிட்டாலும் ஆதவனின் எழுத்து நடை எனக்கு பிடித்திருந்தது.ஆதவன் சிறுகதைகளை வாசிப்பதற்கு இருநாட்கள் முன்பு நடந்த சம்பவம் இது.ஆதவன் சிறுகதைகள் நூலில் முதலாவதாக இருந்த கதை "முதலில் இரவு வரும்".கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னியின் செல்வன் வாசிக்கும் போது கல்கியின் எழுத்துக்கள் என்னை எவ்வளவு பிரமிக்கவைத்ததோ அதற்கு சற்றும் குறையாத பிரமிப்பு அந்தக் கதையை வாசிக்கும் போது எனக்கு ஏற்பட்டது.எப்படி இவரால் மட்டும் மனித உணர்வுகளை இவ்வளவு உயிரோட்டமாகவும் அழுத்தம் சற்றும் குறையாமலும் வார்த்தைகளில் வடிக்க முடிகின்றது? என்ற பிரமிப்புத் தான் அது.அந்த ஒரு கதையிலேயே ஆதவனின் எழுத்துக்களால் ஆட்கொள்ளப்பட்டுவிட்டேன்.கதையின் இறுதியில் ராஜாராமன் தாயைக் கட்டிக்கொண்டு அழும் காட்சியை வாசிக்கையில் என் கண்களின் ஓரங்களிலும் நீர்த்துளிகள் அரும்பியிருந்தன.நான் இதுவரை வாசித்த கதைகளில் என்னை அதிகம் பாதித்த கதை "முதலில் இரவு வரும்" தான்.இதைத் தவிர "அப்பர் பெர்த்","சிவப்பாயும் உயரமாயும் மீசை வைத்துக் கொள்ளாமலும்" ஆகிய கதைகள் என்னை மிகவும் கவர்நதன.அப்பர் பெர்த்தில் சிதம்பரம் ரயிலில் தன்னோடு பயணித்த பெண்ணை கட்டியணைத்துவிட்டு சிந்திக்கும் இடம்,உயரமாயும் சிவப்பாயும் மீசை வைச்சுக் கொள்ளாமலும் கதையில் வரும் காதலுக்கு பின்னான உணர்வோட்டங்கள் மற்றும் ஒரு தற்கொலை சிறுகதையில் வரும் மாலைநேரத்து வானம் பற்றிய வர்ணனை எனது பேவரிட்.இவை மட்டுமல்ல ஒவ்வொரு சிறுகதையிலும் வரும் முக்கிய பாத்திரங்கள் தம் மனதைத் திறக்கும் வேளைகளில் அவர்களின் உணர்வுகளை அப்படியே மனக்கண் முன் படம்பிடித்துக் காட்டுகின்ற ஆதவனின் எழுத்துக்களை மீண்டும் மீண்டும் ரசித்தேன்.
இச் சிறுகதைத் தொகுதியில் இடம்பெற்ற அனேக சிறுகதைகள் என்னை கவர்ந்தவை என்றாலும் ஒரு சில கதைகளில் ஆதவன் அவர்கள் உணர்வோட்டங்களை அதிக சிக்கலாக்கியிருப்பதாக எனக்குத் தோன்றியது.மற்றபடி இலக்கிய ஆர்வலர்க்கு ஆதவன் சிறுகதைகள் ஒரு அறுசுவை விருந்து என்பதில் எவ்வித ஐயமுமில்லை.